அமெரிக்காவில் திடீர் நிலநடுக்கம்.. மொபைலில் அலர்ட் சத்தம்! அலறி அடித்து எழுந்த மக்கள்! Published: Thursday, September 12, 2024, 23:46 [IST] லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அமெரிக்க நேரப்படி இன்று காலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலோர நகரமான மாலிபுவின் வடக்கே 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கம் அப்பகுதி முழுவதும் உள்ள மக்களால் உணரப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் அமெரிக்க நேரப்படி காலை 7:28 மணிக்கு லாஸ் ஏஞ்சல்ஸின் கடலோர நகரமான மாலிபுவிலிருந்து வடக்கே 4.3 மைல் தொலைவில் மையம் கொண்டு தாக்கியுள்ளது. அது கிட்டத்தட்ட 7 மைல் ஆழத்தில் இருந்தது. இந்த நிலநடுக்கம் முதலில் 5.1 ரிக்டர் அளவில் இருந்ததாக பதிவு செய்யப்பட்ட நிலையில் 4.6 ஆகக் குறைக்கப்பட்டு பின்னர் 4.7 ஆக திருத்தப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் ஏராளமானோர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். தூக்கத்தில் இருந்த மக்கள் ஏராளமானோர், இந்த நிலநடுக்கத்தால் திடுக்கிட்டு விழித்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை நிலநடுக்க எமர்ஜென்சி அறிவிப்பை மக்களின் மொபைல் போன்கள் வாயிலாக அனுப்பியது. எனினும், இந்த எமெர்ஜென்சி அலர்ட் அமெரிக்க நேரப்படி காலை 8:30 மணிக்கு நிறைவடைந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குள் உள்கட்டமைப்புக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை மற்றும் யாருக்கும் காயங்கள் எதுவும் இல்லை. கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பூகம்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் பெரும்பாலானவை தாக்கத்தில் மிகச் சிறியவை. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின் படி, பல நூறு நிலநடுக்கங்கள் ரிக்டரில் 3.0 அளவில் இருக்கின்றன. 15 முதல் 20 சதவீத நிலநடுக்கங்கள் மட்டுமே அளவு 4.0 ஐ விட அதிகமாக இருக்கும். வட அமெரிக்காவில், கலிபோர்னியாவை விட அலாஸ்கா ஆண்டுதோறும் அதிக நிலநடுக்கங்களை பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது. Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block