Published: Friday, September 13, 2024, 17:55 [IST] அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூரில், அரசு பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சித்தூர் மாவட்டத்தின் பலமனேரின் மொகாலி காடு பகுதியில் இன்று காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டிருக்கிறது. திருப்பதியிலிருந்து பெங்களூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. விபத்து குறித்து நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “பலமனேரிலிருந்து சித்தூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த அரசு பேருந்து மீது மோதியது. இதனால் பேருந்துக்கு பின்புறம் வந்த மற்றொரு லாரியும் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து மீது வேகமாக மோதியது” என்று கூறியுள்ளனர். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 30 பேர் வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில், 5 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. எனவே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. விபத்து குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்திருக்கிறார். அதேபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block