இருண்ட காலத்திற்கு போன இமாச்சலப் பிரதேசம்.. சொதப்பிய சுக்விந்தர் சிங் ஆட்சி.. மக்கள் அதிர்ச்சி Updated: Sunday, September 8, 2024, 23:53 [IST] சிம்லா: இமாச்சலப் பிரதேச முதல்வராக உள்ள சுக்விந்தர் சிங் சுகு கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர்.. தற்போதைய ஆட்சிக் காலத்தில் அளித்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்காகவும், தவறான நிர்வாகத்திற்காகவும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஒரு காலத்தில் மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் திறன் கொண்ட தலைவராகப் பார்க்கப்பட்ட சுக்விந்தர் சிங் சுகு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். தொடர்ச்சியான நிர்வாகத் தோல்விகள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது: சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றபோது உள்கட்டமைப்பை மேம்படுத்துவேன், வேலையில்லாத் திண்டாட்டத்தை சரி செய்வேன், இமாச்சலப் பிரதேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவேன் என்றெல்லாம் வாக்குறுதிகள் அளித்தார். இந்த வாக்குறுதிகள் பேப்பரில் இருந்தாலும் இப்போது வரை நிஜமாகவில்லை. அவர் அளித்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. அவரது தேர்தல் பிரச்சாரத்தின் அடிக்கல்லாகக் கருதப்பட்ட விஷயமே.. மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத் திட்டத்தை சரி செய்வேன்.. எல்லோருக்கும் வேலை வழங்குவேன் என்பதே. ஆனால் அதை கூட அவர் செயல்படுத்தத் தவறியது அவரின் ஆட்சியின் தோல்விக்கான உதாரணங்களில் ஒன்றாகும். வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் எதுவும் அங்கே இளைஞர்களுக்கு வேலை வழங்கவில்லை. கிராமப்புறங்களில் சாலை இணைப்பை மேம்படுத்துவது மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது போன்ற வாக்குறுதிகள் எதுவும் அவரால் நிறைவேற்றப்படவில்லை. இதனால் அரசின் மீது மக்கள் கடுமையான கோபம் மற்றும் அதிர்ச்சியில் உள்ளனர். மோசமான ஆட்சி நிர்வாகம்: வாக்குறுதிகள் இருக்கட்டும்.. ஆட்சி நிர்வாகத்திலும் சுக்விந்தர் சிங் மோசமாக சொதப்பி உள்ளார். சரியான நிர்வாக திறன் இல்லாமல் அவர் எடுத்த முடிவுகள் மக்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவம் மற்றும் கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளில் கூட சுக்விந்தர் சிங் சொதப்பி உள்ளார். மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை, அரசு பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லை , அவர்களுக்கு தர சம்பளம் இல்லை, நிர்வாகத்தை நடத்த நிதி இல்லை என்று சுக்விந்தர் சிங் மீது புகார் மேல் புகார் குவிந்து வருகிறது. சுக்விந்தர் சிங் ஆட்சிக்கு கீழ் மொத்தமாக அரசு இயந்திரம் சீர்குலைந்ததாகத் புகார்கள் வைக்கப்படுகிறது. மொத்தமாக ஆட்சி நிர்வாகமும் இவரின் ஆட்சிக்கு கீழ் நொறுங்கி சீர்குலைந்து உள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்க தெரியாமல்.. கைமீறி செல்லும் அளவிற்கு விட்டது சுக்விந்தர் சிங்கின் மோசமான ஆட்சி நிர்வாகத்திற்கு பெரிய எடுத்துக்காட்டு. சிம்லாவில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்: சிம்லாவில் நிறைய ஆக்கிரமிப்புகள் நடப்பதாக கடுமையான விமர்சனங்கள், புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில், சிம்லாவில் உள்ள ஒரு மசூதி சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறி, உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த மசூதிக்கு எதிராக போராடினார்கள். இப்படி பல இடங்களில் சுக்விந்தர் சிங் ஆட்சிக்கு கீழ் ஆக்கிரமிப்புகள் நடப்பதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. சட்டவிரோத கட்டுமானங்களுக்கு மாநில அரசு கண்ணை மூடிக்கொண்டு வழி ஏற்படுத்தி கொடுப்பதாக புகார்கள் வைக்கப்படுகின்றன, உள்ளூர் அல்லாதவர்களின் வருகைக்கு சுக்விந்தர் சிங் அரசு தொடர்ந்து வழி ஏற்படுத்தி கொடுப்பதாக கூறப்படுகிறது. அதோடு நகரத்தின் மக்கள்தொகை கட்டமைப்பை மாற்றியமைப்பதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அதாவது அங்கே இருக்கும் பாரம்பரிய மக்களின் தொகை குறைந்து.. வேற்று ஆட்களின் மக்கள் தொகை அதிகரித்து உள்ளதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. சிம்லாவின் கலாச்சார மற்றும் மக்கள்தொகை பாரம்பரியத்தைப் பாதுகாக்க சுக்விந்தர் சிங் அரசு தவறிவிட்டதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. சட்டசபை விவாதத்தின் போதே தூங்கும் முதல்வர் சுகு: இவரின் மோசமான ஆட்சிக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டை சொல்ல வேண்டும் என்றால்.. சமீபத்தில் ஒரு சட்டமன்றக் கூட்டத்தின் போது முதல்வர் சுகு தூங்கியதுதான். அவரின் மோசமான, சோம்பேறித்தனமான ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் நடந்தது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காதது உள்ளிட்ட பிரச்சனைகளில் மாநிலம் சிக்கித் தவிக்கும் நேரத்தில் இந்த படம் மக்கள் இடையே கோபத்தை கிளப்பியது. ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இதர அரசு ஊழியர்கள் தங்கள் ஊதியத்தைப் பெறாமல் பல மாதங்களாக துடித்துக்கொண்டு இருக்கின்றனர். இப்படிப்பட்ட நேரத்தில்தான் மாநில முதல்வர் சுகமாக தூங்கிக்கொண்டு இருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காதது.. மாநிலம் முழுவதும் பரவலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது. சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய சுகு தவறிவிட்டார். அவரின் அலட்சியமான செயல்பாடு பொதுத்துறை ஊழியர்களுக்கு கணிசமான சிரமத்தை ஏற்படுத்தியது. மேலும் நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் சிதைத்தது.. ஹிமாச்சல பிரதேசத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல்: ஹிமாச்சலப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் சுகுவின் ஆட்சியின் இன்னொரு தோல்வி ஆகும். ஒரு காலத்தில் அமைதியான மாநிலம், அழகான மாநிலம் என்று சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற மாநிலம், இப்போது கடுமையான போதைப்பொருள் பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறது, குறிப்பாக இளைஞர்களிடையே. குலு, மணாலி மற்றும் மண்டி போன்ற பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனால் குற்றச் செயல்களும் அங்கே அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் பரவுவதை தடுத்தது, குற்றச்செயல்களை தடுத்தது என்று சட்ட ஒழுங்கில் அம்மாநில அரசு கடுமையாக சொதப்பி உள்ளது. போதைப்பொருள் பிரச்சனையை சமாளிக்க தவறியது, முறையான சட்டங்கள் கொண்டு வர தவறியது என்று சொதப்பல்களின் உருவமாக சுகு ஆட்சி அங்கே அமைந்துள்ளது. முடிவுரை: இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வரான உள்ள சுக்விந்தர் சிங் சுகுவின் பதவிக்காலம் தவறான நிர்வாகம், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் அமைதியின்மை ஆகியவற்றின் உதாரணமாக மாறி உள்ளது. முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது முதல் சட்டவிரோத கட்டுமானங்கள், போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் சம்பளம் வழங்காதது போன்ற முக்கியமான பிரச்சினைகளை தவறாகக் கையாள்வது வரை சுகுவின் நிர்வாகம் எல்லாவற்றிலும் சறுக்கி உள்ளது. சறுக்கல் மன்னனாக மாறி உள்ள சுகு மாநிலத்தை இருண்ட காலத்தை நோக்கி கொண்டு சென்றுள்ளார். இமாச்சலப் பிரதேச மக்கள் தங்கள் முதலமைச்சரின் திறமையற்ற ஆட்சியில் நம்பிக்கை இழந்து கடும் அதிர்ச்சியில் உறையும் அளவிற்கு நிலைமை அங்கே மோசமாகி உள்ளது.