உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த திட்டம்? ரஷ்யாவிற்கு செல்லும் அஜித் தோவல்.. பரபர பின்னணி தகவல் Updated: Sunday, September 8, 2024, 14:42 [IST] மாஸ்கோ: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்த வாரம் மாஸ்கோ செல்கிறார். இந்த பயணத்தின் போது ரஷ்யா – உக்ரைன் மோதலை தீர்க்கும் நோக்கில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி, ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு அடுத்தடுத்து பயணம் மேற்கொண்ட நிலையில், தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் ரஷ்யா செல்கிறார். இந்த பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புதினை அஜித் தோவல் சந்தித்து பேசுகிறார். அப்போது ரஷ்யா – உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும், அமைதிக்கான முயற்சிகள் தொடர்பாகவும் அஜித் தோவல் விவாதிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித் தோவலின் இந்த பயணத்தின் போது, பிரிக்ஸ் – தேசிய பாதுகாப்பு ஆலோசர் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்திற்கு இடையே, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடனும் அஜித் தோவல் ஆலோசனை நடத்த உள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த ஆண்டு பிரிக்ஸ் – என்.எஸ்.ஏ கூட்டம் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பாக அஜித் தோவல் கலந்து கொண்டிருந்தார். கடந்த மாதம் பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இந்த உரையாடலின் போது, அஜித் தோவல் அடுத்த மாதம் மாஸ்கோ வர இருப்பதாகவும் அப்போது அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனை செய்வார் என்று மோடி கூறியிருந்தார். பிரதமர் மோடி உக்ரைன் பயணத்தை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பிய பிறகு, புதினுடன் பேசுகையில் இவ்வாறு கூறியிருந்தார். பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம், உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, ‘ராஜ்ய ரீதியிலும் பேச்சுவார்த்தையின் மூலமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும், நண்பர் என்ற அடிப்படையில் தனிப்பட்ட முறையில் ரஷ்யாவுடன் அமைதிப்பேசுக்கு மத்தியஸ்தம் செய்து உதவ தயராக இருப்பதாக கூறியிருந்தார். முன்னதாக, உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்த ரஷ்ய அதிபர் புதின், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என்று புதின் அறிவித்தார். இந்த நிலையில்தான் அஜித் தோவலின் ரஷ்ய பயணம் சர்வதேச அளவில் கவனம் பெறுவதாக அமைந்துள்ளது. நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் – ரஷ்யா போர் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவி, நிதி உதவி அளித்து வருவதால் ரஷ்யாவுக்கு உக்ரைன் கடும் சவால் அளித்து வருகிறது. உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்ற ரஷ்யாவின் கனவும் சிதைந்து போனதால் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என்று இறங்கி வந்துள்ளது. Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block