Published: Saturday, September 14, 2024, 23:39 [IST] டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 பேர் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை உடனடியாக மீட்க, வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தராகண்ட் மாநில அதிகாரிகளை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் செய்வது வழக்கம். அந்தவகையில், உத்தராகண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து சுமார் 30 பேர் புனித பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், தவாகாட் – தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழியாக திரும்பி வர இருந்த தமிழர்கள், நிலச்சரிவு காரணமாக கீழே இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவு அபாயம் இருந்து வருவதால் அவர்கள் தொடர்ந்து வருவது பாதுகாப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. நிலச்சரிவு குறித்து உடனடியாக உள்ளூர் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆதி கைலாஷ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் திரும்பி வர முடியாமல் சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேர் சிக்கிய தகவல் அவர்களின் உறவினர்கள் மூலமாக கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூர் ஆட்சியர் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, இதுபற்றி கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமாரை தொடர்பு கொண்டு பேசிய தமிழக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உடனடியாக தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். மேலும், உத்தரகாண்ட் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி, தமிழர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் கூறுகையில், “உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக உள்ளனர். தமிழர்கள் 30 பேருக்கும் தேவையான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அண்மை காலங்களில் உத்தரகாண்ட் செல்லும் பக்தர்கள் இயற்கை பேரிடர்களில் சிக்குவது அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேதார்நாத் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்ட இருப்பது ஆன்மீக பயணம் செய்யும் பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block