கலவர பூமியாக மாறிய மணிப்பூர்.. கட்டுப்படுத்த தவறிய அரசு! ஆளுநர் மாளிகையை மாணவர்கள் முற்றுகை Updated: Monday, September 9, 2024, 14:50 [IST] இம்பால்: மணிப்பூர் மீண்டும் வன்முறை வெடித்திருக்கும் நிலையில், இதனை கட்டுப்படுத்த கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று அம்மாநில ஆளுநர் மாளிகையை அனைத்து மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறை 16 மாதங்கள் கடந்த பின்னரும் அடங்கவில்லை. இதில் 220க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், 1,108 பேர் படுகாயமடைந்துள்ளனர், 32 பேர் காணவில்லை. பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக ஏறத்தாழ 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, நாகா, ஜோ உள்ளிட்ட பழங்குடி மக்கள் 47 சதவிகிதமும், மெய்தி உள்ளிட்ட பழங்குடியினர் அல்லாத மக்கள் 53 சதவிகிதமும் இருக்கின்றனர். இங்கு பழங்குடி மக்களுக்கு என சில சிறப்புரிமைகள் இருக்கிறது. அதாவது இம்மாநிலத்தில் நிலங்களை வாங்க இம்மக்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. எனவே 53 சதவிகிதமாக உள்ள மெய்தி மக்கள் தங்களை பழங்குடி சமூகத்தினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். மணிப்பூர் சட்டமன்ற தேர்தலின்போது, மெய்தி மக்களை பழங்குடியினர் சமூகத்தில் சேர்ப்பதாக பாஜக வாக்குறுதி அளித்தது. எதிர்பார்த்தபடி அந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது. மெய்டெய் மக்களும் தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தினர். ஆனால் பாஜக அரசு மவுனம் காத்தது. எனவே அம்மக்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமும் இவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தலை வழங்கியது. இதனையடுத்து இதற்கான பணிகளை அம்மாநில பாஜக அரசு மேற்கொண்டது. இதுதான் வன்முறைக்கான தொடக்க புள்ளி. இப்படி இருக்கையில் மணிப்பூரில் வன்முறை குறைந்து வருகிறது என மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த தாக்குதல் சம்பவம், மத்திய அரசின் கருத்து மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிரிபாம் மாவட்டத்தில் மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 5 கி.மீ தொலைவில் முதல் சம்பவம் நடந்திருக்கிறது. துப்பாக்கி ஏந்திய மர்ம நபர், அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். பின்னர் வீட்டிலிருந்து அனைவரையும் சுட்டு கொலை செய்திருக்கிறார். இதனையடுத்து இரண்டாவது சம்பவம் மாவட்ட தலைநகரில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் நடந்திருக்கிறது. இந்த சம்பவத்தில், இரண்டு ஆயுதம் ஏந்திய குழுக்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் 7 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். அதேபோல பிஷ்னுபூர் மாவட்டத்தில் சிலர் தாக்குதலுக்கு ராக்கெட் லாஞ்சரை பயன்படுத்தியுள்ளனர். இங்குள்ள கிராமங்கள் மீது அதிகாலை 4.30 மணியளவில் ராக்கெட் லாஞ்சர்கள் வீசப்பட்டிருக்கின்றன. இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என போலீஸ் சந்தேகித்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், இம்பாலில், ட்ரோன்களை பயன்படுத்தி குண்டுகள் வீசப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து, தற்போது அடுத்தடுத்த தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது மணிப்பூர் மட்டுமல்லாது, நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், மணிப்பூர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மாணவர் சங்கத்தினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வன்முறை தொடர்வதால், இதற்கு காரணம் டிஜிபி, பாதுகாப்பு ஆலோசகர்தான் என்று கூறி, அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்திருக்கிறது. போராட்டத்தை தடுக்க சிஆர்பிஎஃப் வீரர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அவர்களை மாணவர்கள் விரட்டியடித்துள்ளனர். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block