காஷ்மீர்: காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சி? இப்பவே துண்டு போடும் மெகபூபா முப்தி மகள்! Updated: Sunday, September 15, 2024, 13:52 [IST] ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் பாஜக அல்லாத கூட்டணி அரசு உருவாவதில் மக்கள் ஜனநாயகக் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என அக்கட்சியின் தலைவரான மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிதான் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என கருத்து கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில் மெகபூபா முப்தி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 தேதிகளில் 3 கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ந் தேதி நடைபெறும். 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில், காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணியே ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனல் பறந்து கொண்டிருக்கும் தேர்தல் களத்தில், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரான முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சியானது பாஜகவுடன் மறைமுக உறவை வைத்துள்ளது; தேர்தலுக்குப் பின்னர் பாஜக ஆட்சி அமைக்கவே மக்கள் ஜனநாயகக் கட்சி உதவக் கூடும் என விமர்சித்திருந்தார். இதனை மறுத்துள்ளார் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி. இது தொடர்பாக இல்திஜா முப்தி கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்குப் பின்னர் பாஜக அல்லாத கூட்டணி அரசுதான் அமையும். அப்படியான ஒரு அரசு அமையும் போது மக்கள் ஜனநாயகக் கூட்டணியின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். ஜனநாயகத் தேர்தல் களத்தில் யாரும் யாரையும் போட்டியிடக் கூடாது என சொல்லிவிட முடியாது. ஜமாத் இ இஸ்லாமி, குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கக் கூடிய நல்ல அமைப்புதான். அந்த இயக்கம் போட்டியிடுவதற்கு ஏன் தேசிய மாநாட்டுக் கட்சி அச்சப்பட வேண்டும் என தெரியவில்லை.? மெகபூபா முப்தியை ராணி எலிசெபத் போலவும் என்னை இளவரசி விக்டோரியா போலவும் சித்தரிப்பதை நிறுத்துங்கள். நாங்கள் அனைவருமே மக்களுக்காகவே களத்தில் நிற்கிறோம். ஜனநாயக அமைப்பில் அனைவரும் தேர்தலில் போட்டியிட உரிமை உண்டு. ஆகையால் நானும் தேர்தலை சந்திக்கிறேன். மக்கள்தான் யார் தங்களுக்கு தேவை என்பதை தீர்மானிக்கக் கூடியவர்கள். இவ்வாறு இல்திஜா முப்தி தெரிவித்தார். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block