சூனியக்காரர்கள் நடமாட்டம்.. தொடரும் திக் திக் கொலைகள்.. சத்தீஸ்கரில் நடந்தது என்ன? Updated: Monday, September 16, 2024, 15:04 [IST] ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாந்திரீக வேலைகளில் சிலர் ஈடுபடுவதாகவும், சூனியக்காரர்கள் நடமாட்டம் உள்ளதாகவும் கூறி பொதுமக்கள் அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுவது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். சூனியம், செய்வினை, மாந்திரீகம் போன்ற பிளாக் மேஜிக் விஷயங்கள் இன்றும் சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சில தொலைக்காட்சிகளில் சில நிமிட விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும் உண்டு. இதன் மேலான நம்பிக்கையும், பயமும் பொதுமக்களிடம் இன்றளவும் உள்ளது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் சூனியக்காரர்கள் நடமாட்டம், மாந்திரீக வேலைகளில் ஈடுபடுவதாகக் கூறி கொலைச் சம்பவங்கள் நடைபெறுவது பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், போலாதபார் மாவட்டத்தில் சைத்ரம் கைவர்த்தியா 47, அவருடைய சகோதரிகள் ஜமுனா 28, யசோதா 30, ஜமுனாவின் மகன் யாஷ் 11 ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் செப்டம்பர் 12 ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இதுகுறித்து அப்பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த ராம்நாத் பட்லா என்பவரின் மகள் அண்மைக்காலமாக கடும் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், தனது மகளின் நிலைமைக்கு சைத்ரம் கைவர்த்தியாவின் தாய் வைத்த சூனியம்தான் காரணம் என்று கூறி ராம்நாத் பட்லாவும், அவரது இரண்டு மகன்களும் இந்த கொடூர கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த கொலைச் சம்பவத்தின்போது சைத்ரம் கைவர்த்தியாவின் தாய் அவரது வீட்டில் இல்லை. இதைத்தொடர்ந்து, ராம்நாத் பட்லா மற்றும் அவரது இரண்டு மகன்களை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் ஓய்வதற்குள் சூனியக்காரர்கள் நடமாட்டம், மாந்திரீகம் என்று கூறி 3 பெண்கள் உள்பட 5 பேர் பொதுமக்களால் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடியினா் கிராமத்தில்தான் இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது. இரண்டு தம்பதி மற்றும் ஒரு பெண் ஆகியோர் சேர்ந்து மாந்தீரிகம் மற்றும் சூனியம் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அந்த கிராம மக்கள் சிலரிடம் இளைஞர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இந்த நபர்களை விட்டுவைத்தால் கிராமத்துக்கும், கிராம மக்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்று கருதியுள்ளனர். இதையடுத்து, பழங்குடியின கிராம மக்கள் அந்த இரு தம்பதி மற்றும் பெண்ணை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கத் தொடங்கியுள்ளனர். நிலைகுலைந்து போன 5 பேரும் அப்பகுதியில் இருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர்களை பின்தொடர்ந்து துரத்திச் சென்று பெரிய பெரிய கற்களைக் கொண்டு வீசியும், உருட்டுக் கட்டையால் அடித்தும் தாக்கத் தொடங்கியுள்ளனர். பொதுமக்கள் கடுமையாக அடித்து தாக்கிய இச்சம்பவத்தில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாமக உயிரிழந்துவிட்டனா். இதில், கொல்லப்பட்ட 5 பேருமே 32 முதல் 43 வயதுக்கு உட்பட்டவா்கள் ஆவர். இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அதே கிராமத்தைச் சோ்ந்த 21 முதல் 35 வயதுக்கு உட்பட்ட 5 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 12 ஆம் தேதி 11 வயது சிறுவன் உள்பட 4 பேர் சூனியக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி கொலை செய்யப்பட்ட நிலையில், பெண்கள் உள்பட 5 பேர் கிராம மக்களால் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block