Updated: Thursday, September 12, 2024, 19:56 [IST] சிதம்பரம்: சென்னையில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நோக்கி சென்ற கார், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பு.முட்லூர் புறவழிச் சாலையில் சென்ற போது, எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. புதன்கிழமை நள்ளிரவு நடந்த இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த உடனே லாரி ஓட்டுநரும், கிளீனரும் தப்பி ஓடிவிட்டார்கள். தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனத்தில் செல்லும் மிகவும் கவனமாக செல்ல வேண்டியது அவசியம் ஆகும். குறிப்பாக குடும்பத்துடன் இரவில் பயணிப்பவர்கள் நெடுஞ்சாலைகளில் மிகவும் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். ஏனெனில் எதிரே வரும் பெரிய வாகன ஓட்டிகள் சில நேரங்களில் செய்யும் சிறிய தவறுகள் பெரிய விபத்துகளுக்கு காரணமாக இருக்கின்றன. அதேபோல் திடீரென இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை குறுக்கே ஓட்டிச் செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. அப்படி திடீரென ஒருவர், சைடு பார்க்காமல் செல்லும் போது, கார் ஓட்டுநர்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குகிறார்கள். இப்படியான சூழலில் குறுக்கே வந்தவரின் தவறால் பல குடும்பங்கள் விபத்தில் இறந்து போயிருக்கின்றன. பகலை விட இரவில் தான் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து அபாயம் அதிகமாக உள்ளது. அதிவேக பயணம் மற்றும் இரவில் போதிய வெளிச்சம் இன்மையால் சில வாகன ஓட்டிகள் தடுமாறுவது, தூக்கமின்மை போன்றவை விபத்துக்கு காரணமாக உள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்து கொர நாட்டு கருப்பூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதாகும் யாசர் ஹராபத் , மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நக்கம்பாடி பள்ளிவாசல் தெருவையைச் சேர்ந்த முகமது அன்வர் (56), குத்தாலம் நக்கம்பாடி ஸ்ரீ கண்டபுரம் ஹாஜியார் தெரு பஷீர்அகமது மனைவி ஹாஜிதா பேகம் (62), திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த அசரப் அலி மனைவி சராபாத் நிஷா (30), இரண்டு வயது அப்னான் என்ற ஆண் குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் காரில் பயணித்துள்ளனர். இவர்கள் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துபாயைச் சேர்ந்த உறவினரை சென்று பார்த்துவிட்டு மயிலாடுதுறை நோக்கி ஸ்விப்ட் டிசையர் காரில் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வாகனம் புதன்கிழமை நள்ளிரவு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி முட்லூர் அருகே ஆணையம்குப்பம் எனும் இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், இடிபாடுகளில் சிக்கிய காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசுக்கு உடனடியாக அந்த சாலையில் சென்றவர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரங்கிப்பேட்டை போலீசார், ஐந்து பேரின் உடல்களையும் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகியோர் விபத்து நடந்த உடனேயே அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகினர். விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block