செல்போனை பார்த்தாலே அலறும் லெபனான் மக்கள்! மரண பயம் காட்டிய பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பு சம்பவங்கள் Updated: Thursday, September 19, 2024, 1:04 [IST] பெய்ரூட்: லெபனானில் நேற்று பேஜர் கருவிகள் வெடித்து பலர் பலியான நிலையில் இன்று வாக்கி டாக்கிகள் வெடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அடுத்தடுத்து மின்னணு கருவிகள் வெடிப்பால் பலர் பலியாகி வருவதால் லெபனான் மக்கள் போனை பார்த்தாலே பயத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முதல் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தொடர் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது. இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 17 ஆம் தேதி) பிற்பகலில் லெபனானில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த 100க்கும் அதிகமான பேஜர்கள் அடுதடுத்து வெடித்துச் சிதறின. இதில், ஹிஸ்புல்லா அமைப்பினர் உள்பட 12 பேர் பலியாகினர். 2500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதில், 200 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில், ஈரான் தூதர் முஜூதாபா அமானி காயமடைந்தார். அதேபோல், ஹிஸ்புல்லா பிரதிநிதி அலி அம்மாரின் மகன் கொல்லப்பட்டார். இந்நிலையில், பேஜர்களை வெடிக்க வைக்கும் இந்தச் சதிச்செயல் நன்கு திட்டமிடப்பட்டு பல மாதங்களுக்கு முன்பே தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் இந்த சதித் திட்டத்தை தீட்டியிருக்கலாம் எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. பேஜர்களை தயாரிக்கும் போதே, இஸ்ரேல் உளவாளிகளின் உதவியுடன் அதில் வெடிபொருள் வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்கேனர் உள்ளிட்ட எந்த கருவியாலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இது வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும், ரகசிய குறியீடு மூலம் பிசிபி போர்டு இயங்க தொடங்கிய சில நொடிகளில் வெடிமருந்து பேட்டரியுடன் சேர்ந்து வெடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 18 ஆம் தேதி) மீண்டும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியுள்ளன. இதில், இதுவரை 14 நபர்கள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் எத்தனை வாக்கி டாக்கிகள் வெடித்தன என்பதன் முழுமையான தகவல் வெளியாகவில்லை. அதேபோல், சில இடங்களில் போன்களும் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று வெடித்துச் சிதறி உயிர்களை பலி வாங்கிய இந்த வாக்கி டாக்கிகளும், பேஜர் வாங்கப்பட்ட காலகட்டத்திலே, அதாவது 5 மாதங்களுக்கு முன்பு வாங்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து, லெபனானில் மின்னணு கருவிகளின் வாயிலாக தாக்குதல் சம்பவம் நடைபெறுவதால் அந்த நாட்டு மக்கள் போனை பார்த்தே பயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் இதுபோன்ற வெடிபொருட்கள் இருக்கக்கூடுமோ என்ற அச்சத்தில் லெபனான் மக்கள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தொடர் சம்பவங்களின் எதிரொலியாக அனைத்து மின்னணு சாதனங்களையும் அணைத்து வைக்குமாறு லெபனான் அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய டெக்னாலஜி யுகத்தில் டெக் கேட்ஜெட்டுகளை பார்த்தே அலறும் சூழலுக்கு லெபனானை தள்ளியுள்ளது இந்தச் சம்பவங்கள். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block