ஜம்முவில் சிக்சர் அடிக்கும் பாஜக.. ஆனாலும் ஆட்சியை பிடிப்பது கஷ்டம்! “இந்தியா” கூட்டணி போடும் கணக்கு Updated: Tuesday, September 17, 2024, 18:17 [IST] ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் லோக்போல் சர்வே வெளியானது. அதில் இந்தியா கூட்டணி வெல்லும் எனக் கூறப்பட்டு இருந்த நிலையில், இது குறித்து விரிவான பகுப்பாய்வு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். காஷ்மீர் மாநிலத்தில் 3 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. அங்குச் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். லோக்போல் சர்வே: இதற்கிடையே இந்த காஷ்மீர் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக லோக்போல் அமைப்பு விரிவான சர்வே முடிவுகளை இப்போது வெளியிட்டுள்ளது. இதில் அங்கு மொத்தம் 90 சீட் இருக்கும் நிலையில், இதில் 47 – 51 சீட்களில் இந்தியா கூட்டணி வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. பாஜக 22 – 25 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த சர்வே முடிவுகளுடன் பகுப்பாய்வு ஒன்றையும் லோக்போல் தளம் வெளியிட்டுள்ளது. அதன்படி காஷ்மீரில் இப்போது பல முனை போட்டி நிலவுகிறது. ஒரு பக்கம் இந்தியா கூட்டணியில் இருந்து பாரூக் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீர் மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் களமிறங்குகின்றன. மறுபுறம் பாஜக, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி (முப்தி) கட்சிகள் களத்தில் உள்ளன. இவை தவிர அப்னி கட்சி, குலாம் நபி ஆசாத் கட்சி, ஆம் ஆத்மி, காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி எனப் பல கட்சிகள் களத்தில் உள்ளன. அடுத்த பிளான் என்ன: இதில் அப்னி கட்சி மற்றும் மக்கள் மாநாடு கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் மீது பாஜகவின் பி டீம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இது அங்கு ஒரு குழப்பமான அரசியல் களத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர ஜமாத்- இ- இஸ்லாமி கட்சியும் பல தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களை ஆதரிக்கின்றனர். இதனால் அங்குப் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்றே தெரிகிறது. காஷ்மீரை பொறுத்தவரை அங்கு மாநில அந்தஸ்து தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. தேர்தல் களத்திலும் இது மிகப் பெரியளவில் எதிரொலிக்கிறது. அங்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால் அரசுக்கும் மக்களுக்கும் இடையே எந்தவொரு தொடர்பும் இல்லாத சூழலே நிலவுகிறது. மத்திய பாஜக அரசு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்குவோம் எனக் கூறியிருந்தது. இருப்பினும், 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதனால் பாஜக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்தியா கூட்டணி போடும் கணக்கு: இதனால் அங்கு இந்தியா கூட்டணிக்கே ஒரு அட்வான்டேஜ் இருக்கிறது. கடும் போட்டி இருந்தாலும் அங்கு இந்தியா கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைப் பெறும் என்றே லோக்போல் சர்வே கூறுகிறது. அங்கு இப்போது அரசு நிர்வாகம் துணை நிலை ஆளுநர் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதை மக்கள் பாஜக ஆட்சியாகவே பார்க்கிறார்கள். இருப்பினும், இதில் மக்களுக்கு ஏற்ப திட்டங்கள் இல்லாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுவே தேர்தலில் மிகப் பெரியளவில் எதிரொலிக்கிறது. பாஜகவில் ஜம்மு: அதேநேரம் ஜம்முவில் பாஜக ஆதரவு அதிகமாகவே இருக்கிறதாம். இதன் காரணமாகவே ஜம்முவில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உள்ளது. அதேநேரம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, இந்தியா கூட்டணியே பெரும்பான்மை பெறும் என்று அந்த லோக்போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block