ஜம்மு காஷ்மீரில் தடுப்பு காவல், பேரணிக்கு அனுமதி மறுப்பு.. இதெல்லாம் கூடாது! தேர்தல் ஆணையம் உத்தரவு Published: Wednesday, September 11, 2024, 13:11 [IST] ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால், இந்த சட்டமன்ற தேர்தல் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. இப்படி இருக்கையில், கடைசி நேரத்தில் அரசியல் கட்சிகளின் பேரணியை ரத்து செய்வது, தலைவர்களை வீட்டு காவலில் வைப்பது போன்றவற்றை செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் பாஜகவை கடும் அப்செட் ஆக்கியிருக்கிறது. காரணம், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததுதான். தொகுதி குறைவாக கிடைத்தால் கூட ஓகேதான், ஆனால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு தொகுதி கண்டிப்பாக வேண்டும் என்று கட்சி எதிர்பார்த்திருந்தது. ஆனால், இந்த எதிர்பார்ப்பில், ஒரு லோடு மண் அள்ளி போட்டது தேர்தல் ரிசல்ட். இப்படி இருக்கையில் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றி வருகிறது. கடந்த 2019ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, நாடு முழுவதும் போராட்டத்தை தூண்டியது. அதேநேரம் கடந்த 2019 ஆண்டு அக்டோபர் மாதத்துடன் அம்மாநில சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் முடிந்துவிட்டதால், உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. எதிர்க்கட்சிகள் என்ன வலியுறுத்தினாலும், அசைந்து கொடுக்காமல் இருந்த மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் தேர்தல் தொடர்பாக அதிரடியாக உத்தரவு போட்டது. அதாவது 2024 செப்டம்பர் மாதத்திற்கு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. எனவே வேறு வழியின்றி மத்திய அரசு தேர்தலை நோக்கி நகர்ந்திருக்கிறது. 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதாவது முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன. எனவே தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானின் உரிமை கோரல், தீவிரவாதிகளின் ஊடுருவல், சட்டப்பிரிவு 370 நீக்கம், மாநில அந்தஸ்து கொடுக்காது.. போன்ற காரணங்களால் இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவிலும் இந்த தேர்தல் கவனம் பெற்று வருகிறது. இப்படி இருக்கையில், தேர்தல் நடத்தை விதிகள் குறித்து தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதாவது நிகழ்ச்சிகளுக்கு உரிய நேரத்தில் அனுமதி வழங்கவும், கடைசி நேரத்தில் பேரணிகள் மற்றும் பிற நிகழ்வுகளை ரத்து செய்ய வேண்டாம் என்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக அரசியல் தலைவர்களை தேவையில்லாமல் வீட்டு காவலில் வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் பாதுகாப்புக் காரணங்கள் என்று கூறி, கடைசி நேரத்தில் வாக்குச் சாவடிகளை மாற்றவோ அல்லது இரண்டு வாக்குச்சாவடிகளை இணைக்கவோ கூடாது என்றும் அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. அதேநேரம் தேர்தலின்போது, பிரச்னைகளை தூண்டவும், அரசியல் ஊழியர்களை குறிவைக்கவும், ஐ.எஸ்.ஐ மற்றும் பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள் தாக்குதலை நடத்தவும் வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block