நாடாளுமன்ற தாக்குதல்.. தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் சகோதரர் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டி! Published: Tuesday, September 10, 2024, 18:00 [IST] ஶ்ரீநகர்: 2001-ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் சகோதரர் அஜாஸ் அகமது குரு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வடக்கு காஷ்மீரின் ஷோபோர் சட்டசபை தொகுதியில் தாம் சுயேட்சையாக போட்டியிடுவதாக அப்சல் குருவின் சகோதரர் அஜாஸ் அகமது குரு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது பேசு பொருளாகி இருக்கிறது. 2001-ம் ஆண்டு நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாதிகளின் கூட்டாளியான அப்சல் குரு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தமது தூக்கு தண்டனைக்கு எதிராக அப்சல் குரு மேல்முறையீடு செய்த மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரிய அப்சல் குருவின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து 2013-ம் ஆண்டு அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். அப்சல் குரு தூக்கிலிடபட்ட பிப்ரவரி 9-ந் தேதியன்று ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு ஆண்டும் பதற்றம் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நடைபெறும் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் அப்சல் குரு குறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் த்லைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா (ஒமர் அப்துல்லா) பேசியிருந்தார். அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியதன் மூலம் எந்த ஒரு நோக்கத்தையும் யாரும் அடைந்துவிடவில்லை என உமர் அப்துல்லா பேசியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக அப்சல் குருவின் சகோதரர் அஜாஸ் அகமது குரு அறிவித்துள்ளார். வடக்கு காஷ்மீரின் ஷோபோர் சட்டசபை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக அஜாஸ் அகமது குரு போட்டியிடுகிறார். ஆனால் அப்சல் குருவின் பெயரால் தாம் வாக்கு சேகரிக்க மாட்டேன்; தேர்தல் பிரசாரம் செய்யமாட்டேன் எனவும் அஜாஸ் அகமது குரு தெரிவித்துள்ளார். மேலும் புனேவில் படித்துக் கொண்டிருந்த தனது மகனை 9 மாதங்களுக்கு முன்னர் பொய் வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். என் மகனுக்கு நீதி கேட்டுதான் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார் அஜாஸ் அகமது குரு. Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block