நான் பதவி விலகத் தயார்.. போராடும் மருத்துவர்கள் மீது ஆக்‌ஷன் எடுக்கமாட்டேன்: மம்தா பானர்ஜி அறிவிப்பு Published: Thursday, September 12, 2024, 23:05 [IST] கொல்கத்தா: மக்கள் நலனுக்காக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். மக்கள் நலனுக்காக நான் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார் எனக் கூறியுள்ளார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த, 31 வயதான பயிற்சி பெண் டாக்டரை, கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி, பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை, சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நீதி வேண்டி அம்மாநில பயிற்சி மருத்துவர்கள், மாணவர்கள் கடந்த 34 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு மருத்துவர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், இந்த விவகாரத்தில் உரிய நீதியும், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யாமல் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், போராட்டம் நடத்தும் பயிற்சி மருத்துவர்களைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்க அரசு அழைப்பு விடுத்தது. அதற்கு அவர்கள் தரப்பில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகவும், அதை அரசு மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், தலைமைச் செயலகத்தில் இன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நேரலை ஒளிபரப்புக்கு அரசு மறுத்ததால் பயிற்சி மருத்துவர்கள் தரப்பில் யாரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2 மணி நேரம் காத்திருந்தார். ஆனால், பயிற்சி மருத்துவர்கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் சந்திப்பு நடக்கவில்லை. இந்நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “பதவியைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனக்கு நீதிதான் வேண்டும். நீதியைப் பற்றி நான் மட்டுமே கவலைப்படுகிறேன். அவர்கள் நாற்காலியை பற்றி கவலைப்படுகிறார்கள். சாமானிய மக்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும். எனவே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் நான் தயார். பயிற்சி மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த என்னால் முடிந்தவரை நான் முயற்சித்து வருகிறேன். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பயிற்சி மருத்துவர்கள் ஏற்காதபோதும், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து, மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைக்காக இரண்டு மணி நேரமாக இங்கேயே காத்திருக்கிறேன். இதுவரை மூன்று முறை பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கிறேன். டாக்டர்கள் போராட்டம் முடிவுக்கு வராததால் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். மக்கள் நலனுக்காக நான் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார். தொடர் போராட்டம் நடத்தி வரும் அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை. கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கும், எனக்கும் நீதி வேண்டும்” எனக் கூறியுள்ளார். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block