மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.. மாணவர்கள் தீவிர போராட்டம்.. கல்லூரிகள் லீவு.. துணை ராணுவம் விரைகிறது Updated: Wednesday, September 11, 2024, 10:25 [IST] மணிப்பூர்: மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் போராட்டத்தை தடுக்கும் விதமாக மணிப்பூரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளையும் மேலும் இருநாட்கள் மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே 2000 சிஆர்பிஎப் வீரர்கள் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் கடந்த மே மாதம் மெய்தி -குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். மணிப்பூரில் பல நாட்கள் நீடித்த வன்முறை , ஒரு கட்டத்தில் நிலைமை சீராகியது. இந்நிலையில் தற்போது மீண்டும் மணிப்பூரில் வன்முறை பரவி வருகிறது. ட்ரோன், வெடிமருந்துகள் நிரப்பிய ராக்கெட்டுகள் மூலமாக ஆயுதமேந்திய குழுக்கள் அண்மையில் தாக்குதல் நடத்தியதால் மீண்டும் போராட்டம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் உருவ பொம்மைகளை எரித்து மாணவர்கள் கடும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனிடையே மணிப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தினார்கள். அப்போது மாணவர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மாணவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். அவர்கள் அனைவரும் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மணிப்பூரில் அசாதாரண சூழல் நிலவி வருவதால் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால் ஆகிய மாவட்டங்களில் நேற்று முதலே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 5 நாள்களுக்கு மணிப்பூரில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளி கல்லூரிகள் அனைத்தும் செப்டம்பர் 8ம் தேதி முதலே மூடப்பட்டுள்ள நிலையில், மேலும் இரண்டு நாட்கள் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால், நிலைமையை கட்டுப்படுத்த தெலுங்கானா, ஜார்கண்டில் இருந்து 2000 சிஆர்பிஎப் வீரர்களை மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு. துணை ராணுவ படையினரான சிஆர்பிஎப் வீரர்கள் மணிப்பூரின் சுரச்சந்த்பூர் மற்றும் இம்பாலுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள், ட்ரோன்கள், ஆளில்லா வான்வெளி இயந்திரங்களை செயல்படவிடாமல் தடுக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகளும் மணிப்பூருக்கு அனுப்பப்பட உள்ளது. கலவரத்தை தடுக்கும் பணியில் மாநிலம் முழுவதும் போலீசாரும், துணை ராணுவ படையினரும் தீவிரமாக இறங்கி உள்ளனர். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block