மணிப்பூர் போலீசாரை நிலைகுலைய வைக்கும் போராட்டக்காரர்களின் அதிநவீன ஆயுதங்கள்-இணையசேவை தடை நீட்டிப்பு! Published: Monday, September 16, 2024, 8:55 [IST] இம்பால்: மணிப்பூரில் போராட்டம் நடத்துகிறவர்கள் தற்போது ஜனநாயக ரீதியாக முழக்கங்களை எழுப்புவதற்கு பதில் கல்வீசித் தாக்குவது, அதிநவீன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவது என புதிய யுக்திகளை கையில் எடுத்திருப்பது பெரும் கவலைக்குரியது என அம்மாநில காவல்துறை தலைவர் ஹெரோஜித் சிங் கவலை தெரிவித்துள்ளார். இதனிடையே மணிப்பூர் மாநிலத்தில் வரும் 20-ந் தேதி வரை செல்போன் இணையசேவை இணைப்புகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் ஒன்றரை ஆண்டுகளாக மைத்தேயி- குக்கி இன மக்களிடையேயான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மோதலைத் தடுக்க மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. வன்முறையால் பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் மோடி ஏன் செல்லவில்லை என்பதும் எதிர்க்கட்சிகளின் கேள்வி. மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து மைத்தேயி இன மக்கள் மீது குக்கி பழங்குடிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இதுவரை இல்லாத வகையில் டிரோன்கள் மூலம் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்படுகிறது. ராக்கெட் லாஞ்சர்களை பயன்படுத்தி ராக்கெட்டுகளை வீசி குக்கி பழங்குடிகள் தாக்குதல் நடத்துகின்றனர். மணிப்பூரில் நாள்தோறும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர் நிகழ்வாகிவிட்டது. இந்த நிலையில் மணிப்பூர் காவல்துறைத் தலைவர் ஹெரோஜித் சிங் நேற்று இம்பாலில் செய்தியாளர்களை சந்தித்த போது அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். அதாவது இதுவரை போராட்டம் நடத்திய குக்கி பழங்குடிகள் ஜனநாயக ரீதியாக முழக்கமிட்டனர்; பதாகைகளை ஏந்தி போராடினர். ஆனால் தற்போது போராட்ட வழிமுறையே வேறாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு போராட்டத்தின் போதும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரே குறிவைக்கப்படுகின்றனர். போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபடுகின்றனர்; அத்துடன் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடும் நடத்துகின்றனர்; சில பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியாக இரும்பு கம்பிகளை வீசித் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். இதனிடையே மணிப்பூரில் வரும் 20-ந் தேதி வரை செல்போன் இணையசேவைகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் டெல்லி, மேகாலயாவின் ஷில்லாங் உள்ளிட்ட பல பகுதிகளில் மைத்தேயி மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். குக்கி பழங்குடிகளோ தங்களுக்கு தனி நிர்வாக அமைப்பு கோரி இத்தகைய தாக்குதல்களை நடத்துகின்றனர். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block