மமதாவுடனான பேச்சுவார்த்தையை லைவ் ஒளிபரப்பு செய்ய மருத்துவர்கள் அடம்-ஏற்க மறுப்பு-மீண்டும் போராட்டம்! Published: Sunday, September 15, 2024, 6:58 [IST] கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொட்டும் மழையிலும் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வரும் பயிற்சி மருத்துவர்களின் பிடிவாதம் தொடருகிறது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி முன்னெடுத்த பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியடைந்தன. முதல்வர் மமதாவுடனான பேச்சுவார்த்தையை நேரலையாக (லைவ்) ஒளிபரப்பு செய்ய வேண்டும் என பயிற்சி மருத்துவர்கள் நிபந்தனை விதித்ததை ஏற்க மறுத்ததால் மீண்டும் போராட்டம் தொடருகிறது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் ஒரு மாதத்துக்கு மேலாக மேற்கு வங்கத்தில் பெரும் புயலை வீசிக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தை முன்வைத்து பல்வேறு கோரிக்கைகளுடன் ஒரு மாதத்துக்கும் மேலாக கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு, பயிற்சி மருத்துவ மாணவர்களை பணிக்கு திரும்பவும் உத்தரவிட்டது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மாணவர்களின் போராட்ட இடத்துக்கே சென்று பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் எனவும் மமதா பானர்ஜி அழைப்பு விடுத்தார். இதனையடுத்து கொட்டும் மழையிலும் மருத்துவ மாணவர்கள், காளிகாட்டில் உள்ள மமதா பானர்ஜியின் இல்லத்துக்கு சென்றனர். ஆனால் மருத்துவ மாணவர்கள் பேச்சுவார்த்தை நடைபெறுவதை நேரடியாக (லைவ்) ஒளிபரப்பு செய்தாக வேண்டும் என நிபந்தனை விதித்தனர். மமதா பானர்ஜியோ, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகையால் லைவ் ஒளிபரப்பு செய்ய முடியாது. பேச்சுவார்த்தையை வீடியோ பதிவு செய்கிறோம். அந்த பதிவை உங்களிடம் தருகிறோம் என்று பதிலளித்தார். இதனை ஏற்க மறுத்த மருத்துவ மாணவர்கள், மமதா வீட்டுக்கு வெளியே கொட்டும் மழையில் நின்று ஆலோசனை நடத்தினர். அப்போது அவர்களை வீட்டுக்குள் வருமாறு மமதா பானர்ஜி அழைத்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த மாணவர்கள் தங்களது போராட்டம் தொடரும்; ஊழல் செய்த மருத்துவ கல்லூரி முதல்வர்கள் அனைவரும் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என அறிவித்துள்ளனர். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block