மதுரவாயலில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் உதவி கேட்பது போல நடித்து, சில நிமிடங்களுக்குப்பின் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை மட்டுமில்லாமல் வாகன ஓட்டியிடமிருந்து அவரது பைக், மொபைல், செயின் ஆகியவற்றை திருடி சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (30). இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த வார சனிக்கிழமை (மார்ச் 25) இரவு சுதாகர் மதுரவாயல் செட்டியார் அகரத்தில் உள்ள தனது முதலாளி வீட்டிற்கு சென்று விட்டு, தன்னுடைய மொபெட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது மதுரவாயல் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் லிப்ட் கேட்டபடி வழியில் நின்றிருக்கிறார். இரவு நேரத்தில் தனியாக நிற்கிறார் என்பதால், அவருக்கு உதவலாம் என்ற எண்ணத்தில், அந்த நபரை சுதாகர் வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றுள்ளார். அப்போது அடையாளம்பட்டு அருகே இருசக்கர வாகனம் சென்றபோது, லிப்ட் கேட்டு வந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி சுதாகரை மிரட்டத்தொடங்கியுள்ளார். அவருடன், அந்த இடத்தில் மற்றொருவரும் இணைந்திருக்கிறார். இருவரும் சுதாகரை மிரட்டியுள்ளனர்.
பின் சுதாகரிடம் இருந்த நகை, பணம், செல்ஃபோன் மற்றும் மொபெட் ஆகியவற்றை திருடி சென்றிருக்கிறார் அந்நபர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர், பின் சுதாரித்துக்கொண்டு மதுரவாயல் போலீசில் புகார் அளித்துள்ளார். தகவல்களின்படி இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் நடந்ததாக தெரிகிறது. மேலும் சுதாகரிடம் லிஃப்ட் கேட்டது, டீனேஜ் வயதினை சேர்ந்த ஒருவரென்றும் சொல்லப்படுகிறது.
சுதாகர் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘லிஃப்ட் கேட்பது போல நடித்து, பின் ஏமாற்றும் இதுபோன்ற நபர்களால்தான் உண்மையிலேயே லிஃப்ட் கேட்பவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்ற நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நெட்டிசன்களும் கண்டனக்குரல் பதிவுசெய்து வருகின்றனர். ‘மனிதநேயத்தில் உதவிசெய்யபோய், கடைசியில் அவருக்கே அதை வினையாகி விட்டதே’ என வேதனையும் தெரிவிக்கின்றனர் வாகன ஓட்டிகள்.
இளைஞர்கள் பலரும் இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு, தங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவதும் கவலையளிக்கும் விதமாக மாறியுள்ளது.