Updated: Sunday, September 15, 2024, 13:57 [IST] டாக்கா: வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவின் 10 நிமிட தொலைபேசி உரையாடல் வெளியாகி உள்ளது. அவர் அமெரிக்காவில் உள்ள தன்வீர் என்பவருடன் பேசியதாக கூறப்படும் நிலையில் அவர் யார்? லீக்கான ஆடியோவில் இருப்பது என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் கடந்த மாதம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டம் வீரியமானது. இதையடுத்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். ஷேக் ஹசீனா அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அடைக்கலம் கோரியதாக கூறப்படும் நிலையில் அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் நம் நாட்டுடன் கடந்த 15 ஆண்டுகளாக நட்பாக செயல்பட்டு வந்த ஷேக் ஹசீனாவுக்கு மத்திய அரசு தற்காலிகமாக அடைக்கலம் கொடுத்துள்ளது. அவர் தற்போது நம் நாட்டில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஷேக் ஹசீனா ராஜினாமாவை தொடர்ந்து வங்கதேசத்தில் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்து நாட்டை வழிநடத்தி வருகிறது. ஷேக் ஹசீனா நம் நாட்டில் தங்கியுள்ள நிலையில் அவரை மீண்டும் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று அங்குள்ள எதிர்க்கட்சிகள், வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் நம் நாடு ஷேக் ஹசீனாவுக்கு பாதுகாப்பு வழங்குவதில் உறுதியாக உள்ளது. இந்நிலையில் தான் நம் நாட்டில் தஞ்சமடைந்த ஒரு மாதத்துக்கு பிறகு ஷேக் ஹசீனாவின் 10 நிமிட தொலைபேசி உரையாடல் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக வங்கதேச செய்தி நிறுவனமான ‛தி டாக்கா ட்ரிப்யூன்’ செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஷேக் ஹசீனா அமெரிக்காவில் உள்ள அவரது கட்சியை சேர்ந்த தன்வீர் என்பவருடன் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் என்பது வங்கதேசத்தில் நிலவும் சூழல், அவாமி லீக் கட்சி தலைவர்களின் நிலை, ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேசத்துக்கு எப்போது செல்வார்? என்பது பற்றிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. அதாவது வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை பற்றி தன்வீர், ஷேக் ஹசீனாவிடம் விளக்கமாக தெரிவித்துள்ளார். அதன்படி தன்வீர், ‛‛பல்வேறு வழக்குகள் நம் கட்சியினர் தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் வழக்குகள் தொடர்பாக தொகுதிகளுக்கு வெளியே இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் நீங்கள் இப்போது வங்கதேசம் திரும்பினால் பிரச்சனைகள் ஏற்படலாம் ஏனென்றால் நம் அனைவருக்கும் எதிராக வழக்குகள் உள்ளன. அதற்கு ஷேக் ஹசீனா நானும் 113 வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ‛‛நீங்களும் வங்கதேசம் செல்ல வேண்டாம். அமெரிக்காவில் இருந்தபடியே உதவி செய்யுங்கள். தற்போது வங்கதேசத்தில் நடக்கும் ஆட்சியால் மக்கள் வறுமை நிலைக்கு செல்ல உள்ளனர். தற்போதைய ஆட்சி வங்கியை சூறையாடுவதோடு, மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்க மறுக்கிறது. மக்களை முட்டாளாக இருந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது” என வருத்தப்பட்டுள்ளார். மேலும் இந்த வேளையில் ஷேக் ஹசீனா, ‛‛நான் வங்கதேசத்துக்கு விரைவில் திரும்பி செல்வேன்” எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் எப்போது வங்கதேசம் செல்ல உள்ளார்? என்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. தற்போது அவருக்கு எந்த நாடுகளும் அடைக்கலம் கொடுக்காத நிலையில் அவர் மீண்டும் வங்கதேசத்துக்கே செல்ல விரும்புவது இந்த ஆடியோ மூலம் உறுதியாகி உள்ளது. மேலும் இந்த உரையாடலில் சுவாரஸ்மான இன்னொரு அம்சமும் இடம்பெற்றிருந்தது. அது என்னவென்றால் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெல்வார்கள்? என்பது தான். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடும் நிலையில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் தான் தன்வீர், ‛‛ அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறலாம்” என்று தெரிவித்தார். அதற்கு ஷேக் ஹசீனா, ‛‛நம்முடன் நல்ல உறவை வைத்திருக்கும் வரை அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வென்றாலும் பரவாயில்லை” என்று கூறினார். ஷேக் ஹசீனாவுடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படும் தன்வீரின் முழுப்பெயர் தன்வீர் கைசர். இவர் அமெரிக்காவில் அடைக்கலாம் கோரி வருகிறார். இவர் இதற்கு முன்பு ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். ஷேக் ஹசீனா அரசு தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்து இருந்தார். 2019ல் அமெரிக்காவுக்கு சுற்றுலா விசாவில் சென்ற தன்வீர் விசா காலம் முடிவடைந்த நிலையில் அங்கு அடைக்கலம் கோரி வருகிறார். ஆனால் தற்போது இணக்கமாக அவாமி லீக் கட்சியுடன் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் கூட தற்போது வெளியாகி உள்ள ஆடியோ என்பது ஷேக் ஹசீனா மற்றும் தன்வீர் ஆகியோர் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் தானா? என்பதில் சந்தேகம் உள்ளது. இதுபற்றி ஷேக் ஹசீனா தரப்பில் இன்னும் விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால் ஆடியோ மீதான சந்தேகம் இன்னும் தீர்க்கப்படாத நிலையில் இந்த ஆடியோ பரவி வருகிறது. Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block