Updated: Tuesday, September 17, 2024, 15:22 [IST] சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் வரும் அக். 5ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. இந்த முறை அங்கு ஆட்சியைத் தக்க வைப்பது பாஜகவுக்குக் கடினம் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அங்கு பாஜக எதிர்கொள்ளும் 3 மேஜர் பிரச்சினைகள் குறித்து நாம் பார்க்கலாம். ஹரியானா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கு இந்த முறை ஆட்சியில் உள்ள பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. இதற்காக இரு தரப்பும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. 90 இடங்களைக் கொண்ட ஹரியானாவில் ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தபட்சம் 46 இடங்களில் வெல்ல வேண்டும். அங்குக் கடந்த 2014இல் ஆட்சியைப் பிடித்த பாஜக 2019ல் தக்க வைத்துக் கொண்டது. ஆனால், ஹரியானாவில் பாஜக இந்த முறை வெல்வது அவ்வளவு ஈஸியான காரியம் இல்லை. ஏனென்றால், ஹரியானா மக்கள் பாஜக மீது கடும் கோபத்தில் உள்ளனர். மத்திய அரசு, மாநில அரசு, உள்ளூர் எம்எல்ஏக்கள் என மூன்று தரப்பு மீதும் கோபத்தில் உள்ளனர். மத்திய அரசு: விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு தவறாகக் கையாண்டதாக விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். ஹரியானா என்பது அதிக விவசாயிகளைக் கொண்ட மாநிலமாகும். விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு கையாண்ட விதத்தை அவர்கள் இன்னும் மறக்கவில்லை. அதேபோல மல்யுத்த வீரர்களின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு கையாண்ட விதமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிரிஜ் பூஷனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் தங்கள் மண்ணின் மைந்தர்களை அவமானப்படுத்தியதாக மக்கள் நினைக்கிறார்கள். அதேபோல அக்னிவீர் திட்டத்திற்கும் அங்குப் பலத்த எதிர்ப்பு இருக்கிறது. நமது நாட்டில் உள்ள ராணுவத்தில் வேலை செய்வோரில் 11% வீரர்கள் ஹரியானாவிலிருந்து வந்தவர்கள். இந்தச் சூழலில் அக்னிவீர் திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இவை எல்லாம் மத்திய பாஜக அரசு மீது மக்களுக்கு இருக்கும் கோபம். கடந்த லோக்சபா தேர்தல் சமயத்திலேயே இது பாஜகவுக்கு எதிராக அமைந்தது. மாநில அரசு: ஹரியானா முதல்வராக மனோகர் லால் கட்டார் இருந்த நிலையில், தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பு அவரை நீக்கினர். அவருக்குப் பதிலாக ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் பதவி வழங்காமல் ஓபிசி பிரிவைச் சேர்ந்த நயாப் சிங் சைனிக்கு முதல்வர் பதவி கொடுத்ததும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டிலேயே அதிகபட்ச வேலையின்மை இருக்கும் மாநிலங்களில் ஒன்றாக ஹரியானா இருப்பதும் மக்கள் கொந்தளிக்க ஒரு காரணமாக இருக்கும். இது தவிர நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களும் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் டெல்லிக்கு அடுத்து ஹரியானா இருக்கிறது. இதுவும் பெண் வாக்காளர்களை பாஜகவுக்கு வாக்களிப்பதைத் தடுக்கிறது. உள்ளூர் தலைவர்கள்: கடைசியாக உள்ளூர் எம்எல்ஏக்கள் மீதான எதிர்ப்பு. சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் ஹரியானா மாநிலத்தில் மக்கள் பலரும் தங்கள் எம்எல்ஏக்கள் மீது கோபத்தில் இருப்பதாகவே கூறியுள்ளனர். இது ஆளும் தரப்பாக உள்ள பாஜகவுக்கு மற்றொரு கெட்ட செய்தியாகும். வெல்லப் போவது யார்: அங்குத் தேர்தலுக்கு சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், தற்போதுள்ள நிலை தொடர்ந்தால் காங்கிரஸ் கட்சியே அங்கு வென்று ஆட்சியை அமைக்கும். இருப்பினும், கடைசி நேரப் பிரச்சாரம் மூலம் அதை மாற்ற முடியும் என பாஜக நம்புகிறது. குறைந்தபட்சம் தொங்கு சட்டசபை அமைந்தால் கூட காங்கிரஸ் ஆட்சி அமைப்பதைத் தடுத்துவிடலாம் என்றே பாஜக திட்டம் போடுகிறது. பாஜக திட்டம் வெற்றி பெறுமா.. இல்லை காங்கிரஸ் அமோக வெற்றியைப் பதிவு செய்யுமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block