Published: Monday, September 9, 2024, 13:37 [IST] சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் கூட்டணி குறித்த முடிவு இன்று அறிவிக்கப்பட வேண்டும்; இல்லையெனில் 90 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவிப்போம் என ஹரியானா மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சுஷில் குப்தா அறிவித்துள்ளார். அதே நேரத்தில், ஆம் ஆத்மி ஒரு தேசியக் கட்சி; ஆகையால் ஹரியானா சட்டசபை தேர்தலில் தனித்தே போட்டியிடவும் தயாராக இருக்கிறோம் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் எம்பி தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஹரியானா மாநிலத்தில் பாஜக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறது. இதனால் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கடும் அதிருப்தி அலை வீசுகிறது. இந்த அதிருப்தி அலையானது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு மிகப் பெரும் சாதகமாக உள்ளது. இதனையே தேர்தல் கருத்து கணிப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன. ஆனாலும் ஹரியானாவில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவைகளுடன் கூட்டணி அமைத்து பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ்- ஆம் ஆத்மி இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்று முடிவுக்கு வரும் என தெரிகிறது. இதனிடையே ஹரியானா மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சுஷில் குப்தா கூறுகையில், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து இன்று மாலைக்குள் எங்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக எங்கள் கட்சியின் மேலிடம் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல் இருந்தால் இன்றே 90 சட்டசபை தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் அறிவிக்க தயாராக உள்ளோம் என்றார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் சிங் எம்பி கூறுகையில், ஆம் ஆத்மி கட்சி ஒரு தேசியக் கட்சி. ஹரியானாவில் தனித்துப் போட்டியிடக் கூட பலம் இருக்கிறது. ஆகையால் ஹரியானா மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடவும் தயாராகவே உள்ளது என்கிறார். ஆனால் Lok Poll கருத்து கணிப்பில், ஹரியானாவில் காங்கிரஸ், பாஜக தவிர இதர கட்சிகளுக்கு சொற்ப எண்ணிக்கையில்தான் இடம் கிடைக்கும்; காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களுக்கு அதிகமான தொகுதிகளே கிடைக்கும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block