Updated: Saturday, September 14, 2024, 18:48 [IST] புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் இது கல்யாண ராமன்கள் கைதாகும் சீஸன். சமீபத்தில் 49 பெண்களுடன் தொடர்பில் இருந்த சத்யஜித் மனோவிந்த் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் 15 பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட பிரஞ்சி நாராயண் நாத் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. ஒடிசா மாநிலம், அங்குல் மாவட்டம், சேண்டிபடா பகுதியைச் சேர்ந்தவர் பிரஞ்சி நாராயண் நாத் (வயது 43). பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர், ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் உள்ள திருமணமாகாத, கணவரை இழந்த, விவாகரத்து பெற்ற ஏராளமான பெண்களை ஏமாற்றியுள்ளார். இவர்களில் பல பெண்கள் நல்ல பணிகளில் இருக்கிறார்கள். நாராயண் நாத், தன்னை ஒரு மத்திய அரசு அதிகாரியாக விளம்பரப்படுத்தியுள்ளார். உண்மையான மத்திய அரசு அதிகாரிக்கே டஃப் கொடுக்கும் விதமாக க்ளீன் சேவ், ஸ்பெக்ஸ், கூலர்ஸ் உடன் டீசன்ட் இமேஜில் வலம் வந்துள்ளார். இப்படி போலியான சுய விவர குறிப்பை உருவாக்கி, அதை பல்வேறு மேட்ரிமோனியல் தளங்களில் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு மேட்ரிமோனியல் தளத்திலும் வித்தியாசமான பெயர், வித்தியாசமான வேலைகளை குறிப்பிட்டுள்ளார். சில இடங்களில் ரயில்வே அதிகாரி, சில இடங்களில் வருமான வரித் துறை அதிகாரி என்றும் இன்னும் சில இடங்களில் கஸ்டம்ஸ் துறையில் பணியாற்றுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாராயண் முதுகலை அரசியல் அறிவியல் (Political Science) முடித்துள்ளார். நாராயண் தொடர்பாக கட்டாக் பகுதியைச் சேர்ந்த பெண் முதன் முதலாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் பெண்ணின் கணவர் கடந்த 2022ம் ஆண்டில் நடந்த ஒரு விபத்தில் உயிரிழந்தார். மறுமணம் செய்வதற்காக அந்தப் பெண், கடந்த 2023 அக்டோபர் மாதம், தன்னுடைய விவரங்களை ஒரு மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அப்போதுதான் நாராயண் அந்தப் பெண்ணுக்கு பழக்கமாகியுள்ளார். சிறிது நாள்களிலேயே அவர் அந்தப் பெண்ணுக்கு லவ் ப்ரபோஸ் செய்துள்ளார். அவரிடம் நாராயண், என் பெயர் ப்ரவகர் ஶ்ரீவத்சவ். நான் ரயில்வேயில் டிக்கெட் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறேன். என் அம்மா, மனைவி ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். எனக்கு யாரும் இல்லை என்று சொல்லி சிம்பதி ஏற்படுத்தியுள்ளார். தொடர்ந்து அந்தப் பெண்ணின் வீட்டுக்கே சென்று, அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லியுள்ளார். பெண்ணின் உறவினர்கள், யோசிப்பதற்கு நேரம் கேட்டுள்ளனர். இதை ஏற்காத நாராயண் அந்தப் பெண்ணை தொடர்ந்து அழைத்து உருக்கமாக பேசி வலையில் விழ வைத்துள்ளார். இருவரும் நெருங்கி பழக, வீடியோ காலில் அந்தப் பெண்ணை நிர்வாணமாக வந்ததை ரெக்கார்டு செய்து வைத்துள்ளார். அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்தும் சென்றுள்ளார். இதை நம்பி அந்தப் பெண் அவரை திருமணம் செய்துள்ளார். நாராயண் சுமார் 5 மாதங்கள் அந்தப் பெண்ணுடன் இருந்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து பணம் பறித்துள்ளார். தொடர்ந்து பிளாக் மெயில் செய்து அந்தப் பெண்ணிடம் ரூ.5 லட்சம் பணம், 32 கிராம் தங்க நகைகளை பறித்துள்ளார். நாராயன் தனக்கு யாரும் இல்லை என கூறினாலும், அவரின் தாய், மனைவி மற்றும் 2 குழந்தைகள் அங்குல் மாவட்டத்தில் இருக்கிறார்கள். இதையறிந்து அந்தப் பெண் புகாரளித்தார். அதனடிப்படையில் போலீஸ் அவரை கைது செய்து விசாரித்தனர். அப்போதுதான் பல மாநிலங்களில் சுமார் 15 பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பல காவல் நிலையங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்ததும் தெரியவந்துள்ளது. Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block